பீஜிங்: சீனாவின் கியாங்டாங் ஆறு திடீரென ஆர்ப்பரித்து பாய்ந்ததில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
கடலில் சுனாமி வருவது போல உலகின் சில பகுதிகளில் உள்ள ஆறுகளில் ‘டைடல் போர்’ என்ற பேரலை சில நேரங்களில் வரும். இந்தியாவில் கங்கை, பிரம்மபுத்திரா நதிகள்
, ஆஸ்திரேலியாவின் ஸ்டைக்ஸ் ஆறு, இங்கிலாந்தின் ஈடன் ஆறு ஆகியவை இதற்கு உதாரணங்கள். சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் ஓடும் கியாங்டாங் ஆற்றில் செப்டம்பர் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த பேரலை நிகழ்வு நடக்கும். பூமியை சந்திரன் நெருங்கி வரும்போது ஏற்படும் ஈர்ப்பு விசை அதிகரிப்பு காரணமாக ஆறுகளில் பேரலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஆற்றில் திடீரென அலைகள் திரள ஆரம்பிக்கும். ஹோவென்ற இரைச்சலுடன் கரையை நெருங்கும். ஆர்ப்பரித்து எழுகிற அலைகள், கரையை முட்டி பல அடி உயரத்துக்கு பிரமாண்டமாக எழும். கியாங்டாங் ஆற்றில் அதிகபட்சமாக 30 அடி உயரம் வரை அலை எழுந்ததற்கான சான்றுகள் உள்ளன.
இந்த ஆண்டின் பேரலை நிகழ்வு 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதை காண நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டிருந்தனர். சந்திரனின் ஈர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் மக்கள் தொலைவில் இருந்தே கண்டு ரசிக்குமாறு அரசு தரப்பு எச்சரித்திருந்தது. இதை பொருட்படுத்தாமல், கரையில் ஏராளமானோர் நின்றிருந்தனர்.
எதிர்பார்த்தபடியே, கியாங்டாங் ஆற்றில் அமைதி நிலவியது. சிறிது நேரத்துக்கு பிறகு அலைகள் எழும்ப ஆரம்பித்தன. கரையை நெருங்க நெருங்க.. ஆக்ரோஷமாக மாறின. வழக்கம்போல, கரை வரை வந்து ‘ரிவர்ஸ்’ எடுக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஷாக். அதற்கு பிறகும் ஆவேசம் அடங்காத அலை, கரையையும் தாண்டி பல அடி தூரம் வரை ஊருக்குள் புகுந்தது. பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம். அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக