ஒரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம். ம.தி.மு.கவின் தலைமை அலுவலகம். நேற்று முளைத்த காளான் கட்சிகள், லெட்டர் பேடு
கட்சிகளெல்லாம் ஊடகங்களில் ஆரவாரமாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அந்த தலைவர் மட்டும் அவரது அண்ணா நகர் வீட்டில், தனிமையில் பேச முடியாமல், துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் தன்னைத்தானே சிறைவைத்துக் கொண்டு அடைந்து போயிருக்கிறார். அவர் வைகோ.
தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த வினவின் முதல் கட்டுரையே இப்படி ஒரு சோக சக்கரவர்த்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதில் எங்களுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் கூர்ந்து கவனித்தால் இது சோகமில்லை, நகைச்சுவை என்பதறியலாம். என்ன, இந்த நகைச்சுவையை பார்த்து யாரும் வாய்விட்டு சிரிக்க முடியாது என்பதுதான் சோகம்.
வரலாற்றில் சோகம் என்பது ஒருவருக்கு ஒரு விடயத்தில் ஒருமுறைதான் வரமுடியும். ஆனால் வைகோவுக்கு மட்டும் அது தொடர்கதையாகி விடுகிறதே? நாளிதழ்களில் தேர்தல் குறித்த நவரசங்களும் விதவிதமாக ஊற்றி எழுதப்படுகின்றன. அரசியலையே மக்கள் நலன் நோக்கு இன்றி ஒரு பரபரப்பு, இரசனை, விறுவிறுப்பு கலந்த நொறுக்குத்தீனியாக கொடுப்பதையே ஊடகங்கள் செய்துவருகின்றன. அதில் கார்த்திக், டி.ராஜேந்தர், சரத்குமார் போன்ற நட்சத்திரங்களெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் போது வைகோ மட்டும் பிலாக்கணம் வைத்து அழுது கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த தேர்தலில் ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் நவரசத்தில் வைகோதான் சோகத்தின் நாயகனோ?
சில வருடங்களுக்கு முன்பு அநேகமாக 2007 என்று நினைவு. சென்னை புறநகர் ஒன்றில் ம.தி.மு,க துவங்கி பதிநான்கு ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம். நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரை. கழகத்தின் கண்மணிகளுக்கு முகமன் சொல்லி பேச ஆரம்பித்தார். ” எகிப்து பிரமிடில் இருப்பது 14 படிகள், ரோமாபுரி பந்தய மைதானத்தில் இருப்பது 14 படிகள், தி ஹேக் நகரின் சர்வதேச நீதிமன்றத்தில் இருப்பது 14 படிகள், வெள்ளை மாளிகை, ராஷ்ரிபதி பவன் எல்லாம் 14 படிகள், ராமன் வனவாசம் 14 ஆண்டுகள், பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் 14 ஆண்டுகள்” என்று பிடித்தவர் அது போல வைகோவின் 14 ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது என்றார். இனி அவர்தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்க போகிறவர் என்றும் சொன்னார். ஆனால் அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லவில்லை. அந்த வரைக்கும் கொஞ்சம் அடக்கம் இருந்தது உண்மை.
அப்போதே யோசித்தேன். இந்த வனவாசம் இன்னும் 20,25,50 ஆண்டுகள் என்று போனால் நாஞ்சில் சம்பத் வாயில் உலக வரலாறும், உலக கட்டிடங்களும் என்ன பாடுபடும் என்று நினைத்தேன். அதனால்தான் வைகோவின் விசயத்தில் சோகமல்ல, நகைச்சுவையே மேலோங்கி இருக்கிறது என்று மீண்டும் உறுதிபடுத்துகிறோம்.
வைகோ குறித்து நடுநிலைமையாளர்கள் சிலரிடம் உயர்ந்த மதிப்பீடு இருக்கிறது. “அவர் நல்லவர், இன்னும் ஊழல்கறை படியாதவர், பேச்சாற்றல், தலைமைப் பண்பு உள்ளவர், இறுதி வரை ஈழத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்தவர்” என்று அவரை போற்றுகிறார்கள். வைகோவின் கூட்டணி மாற்றங்கள் குறித்து விமரிசப்பவர்கள்கூட இந்த விடயங்களை ஒத்துக் கொள்கிறார்கள். எனினும் இது மிகவும் பிழையான சென்டிமெண்டான மதிப்பீடு என்கிறோம். ஒருவேளை சென்டிமெண்டாக உணர்ச்சிவசப்பட்டு, படுத்தி பேசும் வைகோ குறித்து இப்படித்தான் எண்ணுவார்களோ தெரியாது.
சென்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களை ம.தி.மு.க வென்றது. வரும் தேர்தலில் கூட்டணியில் மாற்றமில்லை என்றாலும் வைகோவிற்கு இரட்டை இலக்கில் இடங்கள் கிடைக்காது என்றுதான் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 41, சி.பி.எம்முக்கு 12, சி.பி.ஐக்கு 10 பிறகு சின்ன கட்சிகளுக்கு ஒரிரு இடங்களெல்லாம் முடிவாகிவிட்ட நிலையில் ம.தி.மு.கவின் இடம் குறித்து மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தே.மு.க.தி.க வந்திருப்பதால் அதிக இடம் கொடுக்க முடியாது என்கிறது அ.தி.மு.க. வைகோ இதை உணராமல் இல்லை. எனினும் அவர் 25இல் ஆரம்பித்து 20இல் நின்று இறுதியாக 15வது கொடுங்கள் என்கிறாராம். அம்மாவோ 5இல் ஆரம்பித்து 7,8 என்று நிற்பதாக தகவல். இதனால்தான் புரட்சிப் புயல், புரட்சித் தலைவியை பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட முடியாமல் அண்ணாநகர் வீட்டில் முடங்கி கிடக்கிறது.
ஆனாலும் நண்பர்களே இந்தக்காட்சி இப்போதுதான் முதல்முறையாக நடக்கிறது என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இரு வருடங்களுக்கு முன்னர் கூட அட்சர சுத்தமாக இப்படித்தான் நடந்தது. அதை கொஞ்சம் ஃபிளாஷ்பேக்கில் சென்று பார்ப்போம்.
2009-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல். அ.தி.மு.க அணியில் ம.தி.மு.க, பா.ம.க, சி.பி.எம், சி.பி.ஐ முதலான கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. இதில் ம.தி.மு.கவைத் தவிர மற்ற கட்சிகள் சமீபத்தில்தான் சேர்ந்திருந்தன. அவர்களுக்குரிய தொகுதிகளெல்லாம் ஒதுக்கப்பட்டாலும் வைகோவுக்கு ஒதுக்கீடு முடியவில்லை. அ.தி.மு.க நான்கு தருவதாக சொன்னது. வைகோ கராராக ஆறு என்று கேட்டார். அப்போதும் இதே நிலைதான். சோகம்தான்.
அப்போது ஈழப்பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தென்மாவட்டங்களை சேர்ந்த 200 மாணவர்கள் ஈழத்தமிழருக்காக சென்னையில் வந்து போராடுவதற்கு இரயிலில் வந்தனர். அவர்களை வரவேற்க வைகோ நிலையம் சென்றார். “ஈழத்தின் எதிரி ஜெயலலிதா அணியிலிருந்து வைகோவே வெளியேறு” என்று மாணவர்கள் முழக்கமிட்டார்கள். அதிர்ச்சியில் உறைந்த வைகோ செய்வதறியாது திரும்பினார். வெளியே நிருபர்கள் இன்னமும் தொகுதி உடன்பாடு முடியாதது குறித்து கேட்டார்கள். ” அது குறித்து பேசும் மனநிலையில் நான் இல்லை” என்று வைகோ வெருட்டென்று போய்விட்டார்.
இந்த மனநிலை ஈழத்தின் சோகத்தினால் வந்ததென்று நீங்கள் தவறாக கருதிவிடக்கூடாது. உண்மையில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால்தான் இந்த வருத்தம்.
ஒரு வழியாக ம.தி.மு.கவிற்கு நான்கு தொகுதிகள் விருதுநகர், தஞ்சை, நீலகிரி, ஈரோடு முடிவாகி வைகோவும் சிரிக்காத முகத்துடன் உம்மென்று ஜெயா அருகில் போஸ் கொடுத்து ஒப்பந்தத்தை காட்டினார். இந்த தொகுதிகளெல்லாம் அ.தி.மு.கவிற்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாதது என்பதால் இதில் வெல்ல முடியாதென்பது வைகோவிற்கு தெரியாமல் இருந்திருக்காது. இருந்தாலும் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்?
அப்போதும் ஏன் இப்போதும் கூட அவர் தனியாக தேர்தலில் நின்று பார்க்க முடியாது. அத்தகைய வெற்று சவடால் அடிப்பதற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லை.
ஆனால் அப்படி தனியாக வென்று காட்டுவதற்கென்றுதான் கட்சி ஆரம்பித்தார்.
1944-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் கலிங்கப்பட்டியில் பிறந்த வை. கோபால்சாமி, மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலமாக அரசியலுக்கு அறிமுகமாகிறார். தி.மு.கவில் சேர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க இளைஞராக உருவெடுக்கிறார். 70களில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார். 80களில் ஈழப்பிரச்சினை முன்னுக்கு வரும்போது தி.மு.கவின் நிலைக்கேற்ப வைகோ அதில் தீவிரம் காட்டுகிறார். தனியாக சென்று பிரபாகரனை பார்க்கிறார்.
தலைமை பண்பு அற்ற மு.க ஸ்டாலினைவிட வைகோவின் செல்வாக்கு தி.மு.கவில் உயர்கிறது. பிரச்சினை வருகிறது. வைகோவா, ஸ்டாலினா என்ற போட்டியில் வைகோ கருணாநிதியிடமிருந்து விலகுகிறார். 1993-இல் ம.தி.மு.க உதயமாகிறது. எப்படியும் கருணாநிதி மரித்த பின் தி.மு.கவை முழுவதுமாக கைப்பற்றிவிடலாம் என்ற கணக்கு வைகோவிற்கு இல்லாமல் இருந்திருக்காது.
தி.மு.கவிலிருந்து ம.தி.மு.க பிரிந்தது கொள்கை முரண்பாட்டினால் அல்ல. அது தலைமையை யார் வைத்திருப்பது என்ற ஆதிக்க சண்டையின் விளைவாக நடந்தது. மற்றபடி கருணாநிதியின் உயிருக்கு வைகோவால் ஆபத்து என்ற புளுகை இப்போது கருணாநிதியன் பேரன்களே சட்டை செய்யமாட்டார்கள். இந்த பிளவுக்கு வைகோ காரணமாக இருக்கவில்லை என்றாலும் அவர் இதை ஒரு கொள்கை பிரச்சினையாக பார்க்கவில்லை. தி.மு.கவின் பிழைப்புவாதம், காரியவாதம், ஊழல் அத்தனையும் கொண்டிருந்த பத்து பதினைந்து கொட்டை போட்ட பெருச்சாளிகள்தான் அப்போது வைகோ உடன் சென்றனர். அவர்களும் கூட பின்னர் தி.மு.கவை வைகோ கைப்பற்றுவார் என்று கணக்கு பார்த்து சென்றிருக்கலாம். தற்போது அந்த கணக்கு பொய்த்திருப்பதால் அவர்களில் பெரும்பகுதியினர் ம.தி.மு.கவிலிருந்து விலகிவிட்டனர்.
மேலும் தி.மு.கவில் வைகோ ஒரு தலைவராக உருவானது என்பது தி.மு.கவின் எல்லா தலைவர்களும் தன்னை திட்டமிட்டே ஒரு தலைவராக உருவாக்கிய பாதையில் சேர்ந்ததுதான். படிப்பு, எழுத்து, செயற்கையான அலங்காரப்பேச்சு, உணர்ச்சிவசப்படும் ஆவேசப்பேச்சு, இத்தகைய மலிவான உத்திகளை வைத்தே அண்ணா முதல் கருணாநிதி வரை தலைவர்களாக உருவெடுத்தார்கள் என்றால் வைகோவும் அந்த பள்ளியில் வந்தவர்தான்.
உலகின் எல்லா தலைவர்களும் ஒரு போராட்டப்பாதையின் நிகழ்ச்சிப் போக்கில் ஆளானது போன்றுதான் தி.மு.கவின் ஆரம்பமும் இருந்த்து. என்றாலும் பின்னர் அது செயற்கையான உத்திகள், திறமைகள், சாதி செல்வாக்கு, பணபலம் என்று மாறிப்போனது. இவர்கள் யாரும் மக்கள் நலன் என்ற நோக்கில் புடம் போடப்பட்ட தலைவர்கள் அல்லர். அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
வைகோ தி.மு.கவில் இருக்கும் போது இத்தகைய செயற்கையான தலைவராகத்தான் இருந்தார் என்பதையே இங்கு பதிவு செய்கிறோம். இத்தகைய தலைமைகளுக்குள் அதிகாரத்திற்கான சண்டை என்பது சாதாரணமானதுதான். எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் , மு.கண்ணப்பனும் எதற்காக வைகோவை விட்டு பிரிந்தார்கள்? “மத்தியில் அமைச்சராகும் வாய்ப்பை வேண்டுமென்றே பறித்துவிட்டார், இனி இவரோடு குப்பை கொட்டுவதில் பலனில்லை” என்றுதான் அவர்கள் பறந்து போனார்கள்.
அண்ணாவின் கொள்கையை உண்மையாக பின்பற்றும் கட்சி என்று வைகோ கூறிக் கொண்டாலும் அது இத்தகைய எதிர்மறை உண்மைகளைத்தான் பிரதிபலிக்கிறது. 1996 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக ம.தி.மு.க போட்டியிட்டாலும் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தனித்து போட்டியிட்ட பா.ம.க கூட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஜெயா எதிர்ப்பு அலை தமிழகத்தில் வீசியபடியால் தி.மு.க பெரு வெற்றி பெற்றது. தி.மு.கவின் தலைமை தன்னை சதி செய்து நீக்கிவிட்டது என்பதையே மையமாக பேசிவந்த வைகோவின் பாதை அப்போது எடுபடவில்லை.
அந்த வகையில் தமிழக மக்களின் தேவை அறிந்து அரசியல் செய்யும் தலைவராக கூட அவர் இருந்ததில்லை. தி.மு.கவை வேறு வழியின்றி அந்த எதிர்ப்பு அலை ஆட்சியில் அமர்த்தியது.
இனி தனி ஆவர்த்தனம் செய்தால் மறைந்து மண்ணாகிவிடுவோம் என்று பதறிய வைகோ 98 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து மூன்று தொகுதிகளில் வென்றார். தமிழகத்தையே மொட்டையடித்து பாசிச ஆட்டம் போட்ட ஜெயா சசி கும்பலோடு கூடி குலாவுவதற்கு அவர் வெட்கப்படவில்லை. அவரது அரசியல் நிலை மாற்றங்கள் மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அத்தோடு ஒரிஜினல் திராவிட இயக்கம் என்று கூறிய வைகோ பார்ப்பன பாசிசத்தை அரங்கேற்றுவதற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் துடித்த பா.ஜ.க கூடவும் சேர்ந்தார்.
பா.ஜ.க உடனான கூட்டணி 2003 ஆண்டுவரை தொடர்ந்தது. மத்தியில் வாஜ்பாயி அரசை விசுவாசமான அடியாளாக ஆதரித்தார். 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கூட பாரளுமன்றத்தில் வாஜ்பாயி புகழ்பாடும் பக்தராக இருந்தார். வைகோ இதுவரை பண ஊழல் எதுவும் செய்ததில்லை என்பதை விட இந்த நடவடிக்கை பல மடங்கு ஊழல் தன்மை வாய்ந்தது. பார்ப்பனியத்துக்கு பல்லக்கு தூக்கியது காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைத்தார்.
தமிழகத்தில் பா.ஜ.கவை ஒரு கட்சியாக்கி நிலைநிறுத்தியதில் தி.மு.க, அ.தி.மு.க முதலான பெரியகட்சிகளுக்கும் பங்கிருக்கிறது என்றாலும் சுத்த சுயம்பு என்று கூறிக்கொண்ட வைகோவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தி.மு.கவெல்லாம் சிலபல ஆண்டுகள் கழித்து சீரழிந்தது என்றால் ம.தி.மு.க தோன்றிய வேகத்தில் அதை சாதித்தது. இடையில் அவர் தி.மு.க கூடவும் கூட்டணி சேர்ந்தார். 2001 இல் அவர் ஜெயலலிதாவால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். இத்தகைய சிறை வாசம் கூட அவரது பிழைப்புவாதத்திற்கு நன்மை பயப்பதாக இல்லை.
இருப்பினும் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே பாசிச ஜெயாவோடு கூட்டணி சேர்ந்தார். அதுவும் தி.மு.க ஒரு சீட்டு கொடுக்கவில்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணத்திற்காக அணி மாறினார். முக்கியமாக 2009 பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் என்ற பட்டம் வழங்கப்படவும் காரணமாக இருந்தார். தமிழகத்தில் புலி பூச்சாண்டி காட்டி ஏராளமான தமிழுணர்வாளர்களை கைது செய்து அடக்குமுறை ஆட்டம் போட்ட ஜெயலலிதாவின் மூலம் ஈழம் மலரும் என்று பேசுமளவு சீரழிந்தார்.
ஈழப் பிரச்சினையில் கூட வைகோ எப்போதும் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து சாதித்து விடலாம் என்ற அணுகுமுறையையே கொண்டிருந்தார். ஒரு சில லாபி வேலைகள் செய்தால் ஈழப்பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்பதுதான் அவரது நிலை. முக்கியமாக இந்திய அரசு தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக ஈழப்பிரச்சினைக்கு வில்லனாக இருக்கிறது என்ற முறையில் அவரது அணுகுமுறை என்றும் இருந்ததில்லை.
மேலும் 2009ஆம் ஆண்டு ஈழப்பிரச்சினை முன்னணிக்கு வந்த போதும் அதை வைத்து மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு பதில் அதை தேர்தல் முழக்கமாக்கி ஆதாயம் அடைய நினைத்தார். அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் வென்றுவிட்டால் ஈழப்போர் முடிவுக்கு வரும் என்று புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தவறாக வழிநடத்தியதில் வைகோவுக்கும் பெரும் பங்குண்டு.
முத்துக்குமார் இறந்த பிரச்சினையிலும் அது பெரிய போராட்டமாக உருவெடுத்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். பார்வதியம்மாள் சென்னை விமானநிலையம் வந்த போது கூட தனது இலட்சக்கணக்கான தொண்டர்களை விமானநிலையத்தில் திரட்டி போராட அவர் கனவிலும் கருதவில்லை. ஒரு அறிக்கையோடு முடித்துக கொண்டார். எனவே வைகோ ஈழப்பிரச்சினையில் நேர்மையாக இருந்தார் என்ற கருத்து குறித்து அவரைப் போற்றுபவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காக அணிமாறிய வைகோ இந்த தேர்தலில் கிட்டத்தட்ட27 சீட்டுகள் கிடைக்காது என்றாலும் அணிமாற இயலாது என்ற இழிவான நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இதில் ஆறு சதவீதம் வாக்குகளும், இரண்டு எம்.எல்.ஏக்களும் இருந்தால்தான் மாநிலக் கட்சி என்ற தேர்தல் க மிஷன் அங்கீகாரம் கிடைக்கும். சென்ற தேர்தலில் பறி போன அந்த அங்கீகாரம் இனி எப்போதும் திரும்பாது என்பதுதான் களநிலவரம். மக்கள் நலன் என்ற அங்கீகாரத்திற்கு துரோகமிழைத்தவருக்கு இந்த டெக்னிக்கல் அங்கீகாரம்தான் தற்போது மிகப்பெரிய கௌரவப் பிரச்சினையாம். எனினும் அவர் இதையும் கடந்து வருவார்.
ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் வைகோவின் இலக்குதான் என்ன? அவர் தமிழகத்தில் ஒரு தலைவராக உலா வர வேண்டும். ஊடகங்களில் அவரது கருப்பு மையடித்த மீசை கொண்ட படங்கள் வெளிவர வேண்டும். அவரது அறிக்கைகள் தினசரிகளில் இடம்பெறவேண்டும். சமீபத்தில் கூட உலக மகளிர் தினம், ஜப்பான் சுனாமி குறித்தெல்லாம் அறிக்கை வெளியிட்டார். அதே நேரம் உள்ளுக்குள் அ.தி.மு.க கூட்டணியில் ஒற்றை எண் தொகுதிகள்தானா என்று அவர் கொஞ்சமேனும் அழுதிருக்க வேண்டும்.
இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் ம.தி.மு.கவிற்கான தொகுதிகள் 5 கொடுக்கப்பட்டாலே அது பெரிய விசயம்தான். இதை இல்லை என்று வைகோவால் கூட மறுக்க முடியாது.
மக்கள் நலன் என்ற நோக்கில் வைகோவின் அரசியல் பயணம் என்றுமே நடந்தில்லை என்பதை வைத்து பார்க்கும்போது இன்று அவர் அரசியல் அனாதையாக ஓரங்கட்டப்பட்டார் என்பதற்கும் நாம் வருந்தத் தேவையில்லை. தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் எல்லா வகை சீரழிவுகளோடும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அவர்களது நிழலில் தங்கி வேலை செய்த வைகோ அவர்களது செல்வாக்கை மிஞ்ச முடியுமா என்ன?
ஆக இந்த இடம் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் புறநிலையான காரணங்களும், அகநிலையான காரணங்களும் உண்டு. அதில் வைகோ விரும்பி செய்த பணிகளையே மேலே விமரிசித்திருக்கிறோம். ஆக வைகோ வாய்ப்பு கிடைக்காததால் ஒருபெரிய தலைவராக முடியவில்லை என்று யாராவது சொன்னால் அவர் ம.தி.மு.க கட்சியில் சேரும் தகுதியைக் கொண்டிருக்கிறார் என்று பொருள். அதாவது அவரும் அரசியல் அனாதையாக முடிவு செய்து விட்டார். நாமும் நமது அனுதாபங்களை அவருக்கு தெரிவித்துக் கொள்வோம்.
__________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக