சென்னை: உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை. தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என்று கருணாநிதி அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தி.மு.கவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இது குறித்து அவரது அறிக்கை:
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென்பது இந்திய நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படையில், தி.மு.க.வும் உறுதுணையாக நின்றோ- ஒத்துழைப்பு நல்கியோ அத்தகைய கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல், மத்தியில் ஒரு முற்போக்கு அரசை அமைத்திடவும், சட்டமன்றத்தேர்தல், மாநிலத்தில் ஒரு ஜனநாயக ஆட்சியை அமைக்கவும் பயன்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஒத்த கருத்துடைய கட்சிகளோடு ஒன்றுபட்டு கூட்டணி அமைத்து மத்தியிலும், மாநிலத்திலும், மதச்சார்புடையதும், மனித நேயத்திற்கு விரோதமானதுமான ஆட்சி அதிகாரமையங்கள் அமைந்து விடக்கூடாது என்ற அக்கறையுடன் செயல்படுகின்ற தி.மு.க., அண்மையில் வரவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன் வைக்கப்படாமல் பொதுமக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, கல்வி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி போன்ற பொதுப் பணிகளை குறிக்கோளாகக் கொண்டு - இயங்க வேண்டும் என்பதே எல்லோராலும் விரும்பப்படுகிற - ஏற்கப்படுகின்ற நிலை என்பதைக் கருத்திலே கொண்டு உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு தி.மு.க. முடிவாக எடுத்துள்ளது.
இந்த முடிவின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் எந்த ஒரு அணியும் அமைக்காமல், மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தல்; தேசிய அளவிலான நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மட்டுமே - கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று தி.மு.க. முடிவெடுக்கின்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
காங்கிரஸ் அதிர்ச்சி:
திமுகவின் இந்த முடிவு காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்று ஒரு கோஷ்டியும், தனித்துப் போட்டியிட்டு பலம் காட்ட வேண்டும் என்று இன்னொரு கோஷ்டியும் கூறிவந்த நிலையில், கருணாநிதி தடாலடியாக இப்படி அறிவித்திருப்பது அவர்களை திண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சட்ட மன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சிக்கு, இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மரண அடி கிடைப்பது, கருணாநிதியின் அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக