சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகைக்காக பதட்டத்துடன் காத்திருக்கிறார் கனிமொழி. காரணம், கடந்த மே மாதம் 20ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமே, இன்னமும் சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற சி.பி.ஐ.யின் வாதம்தான்.
இந்த மூன்றாவது குற்றப் பத்திரிகையைத்தான், இதுவரை ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் ஏன் கைது செய்து வைத்திருக்கிறோம் என்று காட்டுவதற்கான மந்திரக் கோலாகக் காட்டவுள்ளது சி.பி.ஐ.
ஒரு வகையில் சொல்லப்போனால், கனிமொழியைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கு கோர்ட்டில் சி.பி.ஐ. கொடுத்துள்ள காரணங்கள் போதாது. வேறு கேஸ் என்றால், இப்படி கைது செய்யப்பட்ட ஒருவர், சுலபமாக ஜாமீனில் வெளியே வந்திருக்க முடியும்.
“இந்த வழக்கில் இவர்களை ஜாமீனில்கூட வெளியில் விடாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளே வைத்திருக்கப் போகிறீர்கள்?” என்று நீதிபதி ஷைனியே சினத்துடன் சி.பி.ஐ. வக்கீல்களிடம் கேட்டதும் நடந்தது. அந்தளவுக்கு ஜாமீன் மறுப்பதற்கான காரணங்கள் போதாது என்ற நிலையில் உள்ளது வழக்கு.
ஆனால் சி.பி.ஐ., “மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்வரை பொறுத்திருங்கள். இவரை ஏன் ஜாமீனில் வெளியே விடக் கூடாது என்பதற்கான காரணங்களை அதில் காண்பிக்கிறோம்” என்று நீதிபதிகளை கன்வின்ஸ் பண்ணிப் பண்ணியே, கனிமொழியை வெளியே விடாமல் வைத்திருக்கின்றது. மூன்றாவது குற்றப் பத்திரிகையை இம்மாதம் 15ம் தேதி தாக்கல் செய்து விடுவோம் என்றும், நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது சி.பி.ஐ.
அதற்கு இன்னமும் இரண்டு வாரங்களைவிட குறைவான நாட்களே உள்ளன.
இதுதான் கனிமொழி சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகைக்காக பதட்டத்துடன் காத்திருப்பதற்கான காரணம். இதுவரை தமக்கு தெரியாத ஆதாரங்கள் எதையாவது சி.பி.ஐ. அந்தக் குற்றப் பத்திரிகையில் காண்பிக்கப் போகின்றதோ என்ற லேசான நடுக்கம் கனிமொழி தரப்புக்கு இருக்கிறது.
கனிமொழி தரப்பைப் பற்றி, வித்தியாசமான கோணத் தகவல் ஒன்றைக் கூறுகிறார்கள். இந்த வழக்கில் தயாநிதி மாறன் சிக்கிக் கொள்வதைப் பற்றிய கவலை ஏதுமில்லாமலேயே, அவரது வக்கீல் வாதிடுகிறார் என்பதே அது.
அதாவது, கனிமொழியின் வக்கீலின் வாதங்களின் பிரதான பாயின்ட் கோர்ட்டால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதே பாயின்ட், தயாநிதி மாறனை வழக்குக்குள் சிக்க வைத்துவிடும். இதைப் புரிந்துகொண்டுதான் சி.பி.ஐ., தயாநிதி மாறன் பற்றி சமீபத்தில் அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளது என்கிறார்கள் சட்டத்துறை வட்டாரங்களில். இது ஒருவகை avoiding tactic என்றும் ஊகிக்கிறார்கள்.
முன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்னரே, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள வேறு சில ஆவணங்களில், தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத நபராக காட்டும் வகையில் வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தன.
சில தினங்களுக்குமுன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பில், சி.பி.ஐ. அதிகாரிகள் ஆச்சரியமான காரியம் ஒன்றைச் செய்தார்கள். தமக்கு அறிமுகமான குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்ட சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், “இன்று தாக்கல் செய்துள்ள டாக்குமென்ட்ஸை கவனமாகப் படித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏதாவது ஸ்கூப் கிடைக்கலாம்” என்று கோடி காட்டினார்.
அன்று வெளியான இரு டில்லிப் பத்திரிகைகளின் மாலைப் பதிப்பில், “தயாநிதி மாறனை இந்த வழக்கில் சிக்க வைக்க போதிய ஆதாரம் ஏதும் சி.பி.ஐ.யிடம் இல்லை” என்று சுடச்சுட செய்தி வெளியானது. மறுநாள் அதே செய்தி தமிழ் ஊடகங்களிலும் இடம் பிடித்துக் கொண்டது.
மீடியாவில் இந்தச் செய்தி நன்றாக அடிபடுவதையும், அதன் ரியாக்ஷனையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது சி.பி.ஐ.
டில்லியில் இந்த வழக்குடன் நெருங்கிய தொடர்புடைய சோர்ஸ் ஒன்றை நாம் விசாரித்த வகையில், “மூன்றாவது குற்றப் பத்திரிகையில், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய இருவரில் ஒருவரது பங்குதான் ஹைலைட் பண்ணப்பட்டிருக்கும். தயாநிதி மாறனை நிச்சயமாகச் சிக்க வைப்பது என்று முடிவு எடுத்தால், கனிமொழி ஜாமீனில் வெளியே செல்வதை சி.பி.ஐ. பெரிதாக எதிர்க்காது. சும்மா ஒப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அமைதியாகிவிடும்” என்று கூறினார்.
அப்படியானால், வரும் 15ம் தேதிக்காக கனிமொழி மாத்திரமல்ல, தயாநிதி மாறனும் பதட்டத்துடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக