விடுதலைப் புலிகளையும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் நிதி விஷயத்தில் தொடர்பு படுத்தி, அமெரிக்க தூதரகத்தால் அனுப்பப்பட்ட கேபிள் ஒன்று, விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு மே 15ம் தேதி அமெரிக்க தூதரகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட கேபிள் இது.
கேபிள் அனுப்பப்பட்ட காலத்தில், ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்திருக்கவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கம் ஸ்ரீலங்காவில் இயங்கு நிலையில் இருந்தது.
விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டுள்ள கேபிள், சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தால் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கேபிள், இந்திய வம்சாவளி அமெரிக்க ராஜதந்திரி ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டது என்றும், அவரது பெயர் ரவி கான்டாடி என்றும் அதிலுள்ள விபரங்களில் இருந்து தெரியவருகின்றது.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இன்னமும் செல்வாக்கு உள்ளதா? இந்தக் கேள்வி பற்றியும் கருத்து தெரிவித்துள்ளது, பிரஸ்தாப கேபிள்.
“இந்திய மாநிலமான தமிழ் நாடு, அதன் பெயர் ‘தமிழர்களுக்கான நாடு’ என்று உள்ள போதிலும், தமிழர்களுக்கு ஒரு நாடு தேவை என்று போராடும் புலிகள் அமைப்புக்கு மிகக்குறைந்த ஆதரவையே கொடுப்பது ஆச்சரியமானதுதான்” என்ற வாக்கியமும் கேபிளில் இடம்பெற்றுள்ளது. ராஜிவ் கொல்லப்பட்டதன் பின் தமிழகத்தில் உள்ள நிலைமை பற்றியே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே கேபிளில், “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு இருந்த ஆதரவு அடியோடு இல்லாது போய்விட்டது” என்றும் கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக சராசரியும், அதற்கு மேலும் பொது அறிவு படைத்த அனைவருக்கும் தெரிந்த உண்மைதான் இது. அப்படியிருந்தும், 2006ல் இது ஏன் குறிப்பிட்ட கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது?
காரணம், சில பிரசார காரணங்களுக்காக இந்த உண்மை முன்பு, சில தரப்பினரால் மறுக்கப்பட்டு வந்திருந்தது. அப்படியான சூழ்நிலைகளில், கிரவுண்ட் ரியாலிடியை தூதரகங்கள் தத்தமது நாடுகளுக்கு அறிவிப்பது வழக்கம்.
“தமிழகத்தில் வசிக்கும் ஒரு சராசரி குடிமகனின் பிரதான கவனம் ஸ்ரீலங்கா பிரச்சினையில் கிடையாது” என்கிறது அமெரிக்க தூதரக கேபிள். “இதே நிலைமைதான் இனியும் தொடரப் போகின்றது. இந்த நிலைமை மாற வேண்டும் என்றால், ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிரான மிகப் பெரிய மனித உரிமை மீறல்கள் நடைபெற வேண்டும், அல்லது, ஸ்ரீலங்காவில் இருந்து தமிழகத்தை நோக்கி பெரும் எண்ணிக்கையில் அகதிகள் வந்து சேர வேண்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1980களில், தமிழகத்தில் ஏற்பட்ட ஈழத் தமிழர் ஆதரவு அலை, மேலே கேபிளில் குறிப்பிடப்பட்ட வகையில்தான் ஏற்பட்டிருந்தது.
குறிப்பிட்ட கேபிள் அனுப்பப்பட்ட மே, 15ம் தேதி 2006க்கு சில தினங்களுக்கு முன்னர்தான் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. கருணாநிதி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தி.மு.க.வின் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைப் பற்றியும் குறிப்பிட்டுள்ள கேபிள், 1996-2001 காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளில் தி.மு.க.வின் செல்வாக்கு இருந்தது என்கிறது.
இந்தக் கணிப்பை முற்று முழுதாக சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. வேண்டுமானால், “அந்தக் காலப் பகுதியில் இரு தரப்பினரும், ஆளுக்கு ஆள் எதிராகப் போகாமல் இருந்தனர்” என்று சொல்லலாம்.
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, மற்றும் ஜேர்மனியில் வசிக்கும் தமிழர்களிடம் இருந்து நிதி சென்றது என்று குறிப்பிடும் அமெரிக்க கேபிள், இந்தியாவில் இருந்து நிதி சென்றது என்பதை மறுத்து, “உண்மையில், அதற்கு தலைகீழாகவே நடந்தது” என்கிறது. அதற்கு, புலிகளிடம் இருந்துதான் நிதி இந்தியாவுக்குள் வந்தது என்பதே அர்த்தம்.
இதற்கு உதாரணமாகக் கட்டப்பட்டுள்ளதுதான் வைகோவுக்கு புலிகள் நிதி கொடுத்த விவகாரம்.
“1993ல் வைகோ தி.மு.க.வில் இருந்து வெளியே வந்தபோது, ம.தி.மு.க.வை கட்டி எழுப்புவதற்காக புலிகள் நிதி உதவி செய்தனர்” என்று சென்னையில் தமிழ் என்.ஜி.ஓ ஒன்றை நடாத்தும் சந்திரஹாசனை மேற்கோள் காட்டிக் குறிப்பிடுகிறது கேபிள். ஆனால், முன் எச்சரிக்கையாக, “இதற்கு நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏதும் கிடையாது” என்ற ஒரு வாக்கியமும் கேபிளில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம்தான் அடுத்து வரும் சில தினங்களில் தமிழக அரசியலில் நெருப்பாகப் பற்றிக் கொள்ளலாம். நெருப்பு எந்தளவுக்கு பெரிதாக இருக்கும் என்பது, வைகோவுக்கும் ம.தி.மு.க.வுக்கும் இன்னமும் 2 மாதங்களுக்குள் வரப்போகும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பதைப் பொறுத்தது.
ஊடகங்கள் விஷயம் வேறு. ஒரு தரப்பினர் பெரிதாகத் தூக்கிப் பிடிப்பார்கள். மற்றொரு தரப்பால் இந்த விஷயத்தை எழுத முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள்? சிம்பிளாக திசை திருப்பி விடுவார்கள்.
திசை திருப்புவது சுலபம். புலிகள், வைகோ, பணம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ‘சந்திரஹாசன் சொன்னார்’ என்ற வாக்கியத்தைப் பிடித்துக் கொண்டால், மிகுதி piece of cake.
“சந்திரஹாசன் சி.ஐ.ஏ. உளவாளி” அல்லது “அமெரிக்க கைக்கூலி” என்று ஒரு சாரார் சொல்வார்கள். மற்றைய சாரார், “றோவின் ஏஜென்ட்” அல்லது “டில்லியின் அடிவருடி” என்ற கலைச் சொற்களுடன் வருவார்கள். அதில் வாதப் பிரதிவாதங்கள் நடக்கும். மெயின் ஸ்டோரி அடிபட்டுப் போகும். It’s that easy to distract.
(கதையோடு கதையாக மற்றொரு விஷயம். 1980களில் இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்தியாவில் வைத்து ஆயுதப் பயிற்சி கொடுத்தது இப்போது ரகசியமல்ல. இதில், மத்திய அரசுக்கும், ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் இடையே இணைப்பாளராகச் செயற்பட்டவர் யார் தெரியுமா?
இதே சந்திரஹாசன்தான்!
சென்னையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து, ஈழ விடுதலை இயக்கத் தலைவர்களுடன் பேசி, மத்திய அரசின் ஆயுதப் பயிற்சி டீலை ஓசைப்படாமல் முடித்துக் கொடுத்தவர் அவரேதான்!)
அதே நேரத்தில், புலிகள் வைகோவுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம், தமிழக அரசியல் கட்சிகள் மட்டத்தில் அடக்கி வாசிக்கப்படலாம் என்பதற்கும், காரணங்கள் உள்ளன.
புலிகள் இயக்கத்துடன் நிதி விஷயத்தில் டீல் பண்ணியது வைகோ மாத்திரம்தான் என்று அடித்துச் சொல்ல தமிழகத்திலுள்ள அநேக கட்சிகள் முன்வரப் போவதில்லை. எந்த பிரதான கட்சியுமே இது பற்றிப் பேசத் தயங்கலாம், காரணம், அஸ்திரம் திரும்பி வந்து தாக்கினாலும் தாக்கலாம்!
தமிழகத்திலுள்ள சில அரசியல் கட்சிகளுக்கு புலிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிதி வழங்கியது உண்மை. அதற்குமுன், சில கட்சிகளிடம் இருந்து புலிகள் நிதி வாங்கியதும் உண்மை.
தமிழகத்தின் தற்போதைய ஆளும் கட்சியியை உருவாக்கிய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பணம் கொடுத்தது, பலருக்கும் தெரியும். பலருக்கு தெரியாதது என்ன? ஸ்ரீலங்கா-இந்தியா ஒப்பந்தம் செய்யப்பட்டபின், புலிகள் அதை ஏற்றுக் கொள்வதற்காக, அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி புலிகளுக்கு மாதாமாதம் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டதும், அதில் இரண்டு தவணைகள் (2 மாதங்கள்) பணம் மாத்திரம் கொடுத்துவிட்டு, பின் நிறுத்திக் கொண்டதும் பலருக்குத் தெரியாது.
அந்தப் பணம் அவரது கட்சி (காங்கிரஸ்) பணமா, அல்லது, இந்திய அரசின் நிதியுதவியா என்பதில்தான் சிறு குழப்பம் உள்ளது. அநேகமாக, காங்கிரஸ் தலைவரும், பிரதமருமான ராஜிவ் காந்தியால் ஒப்புதல் கொடுக்கப்பட்ட, இந்திய அரசின் நிதியுதவியாக இருக்கலாம் என்பது எமது ஊகம்.
சரி. தமிழகத்திலுள்ள பிரதான கட்சிகளில், புலிகளிடம் பணம் வாங்கியவர்கள் யார்?
“இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், பாரதீய ஜனதா கட்சியும் வாங்கவில்லை” என்பதோடு நிறுத்திக் கொள்வோமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக