பாதுகாப்புக்கென வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் தான் வெடிப்புற்றது என முதலில் சந்தேகம் வெளியிடப்பட்ட போதும், அவ்வாறு சிலிண்டர் ஏதும் வரவேற்பறையில் வைக்கப்படவில்லை என மருத்துவமனை டாக்டர் மகேந்திர சர்மா தெரிவித்தார்.
மருத்துவமனையின் வரவேற்பு அறைக்கு அருகே இருக்கைக்கு அடியில் சந்தேகத்துக்குரிய வகையில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் எனவும், இது ஒரு தீவிரவாத தாக்குதல் தான் என உடனடியாக உறுதிப்படுத்த முடியாது உள்ளதாகவும், ஆக்ரா காவற்துறை தலைமை அதிகாரி பி.கே. திவாரி தெரிவித்தார்.
இவ்வெடிப்பு சம்பவத்தில் மருத்துவமனை ஜன்னல் கதவுகள் கடுமையாக தேசமடைந்துள்ளன. குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது மருத்துவமனையில் 97 நோயாளிகள் இருந்துள்ளனர். சந்தேகத்துக்குரியவகையில் இரு உணவு பொதிகள், சைக்கிள், 9 வோல்ட் பேட்டரி, சேர்கிட், கறுப்புநிற பவுடர் தூள்கள் மற்றும் வயர்கள் வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
தீவிரவாத எதிர்ப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பரிசோதனை மேற்கொண்டபோது Improvised Explosive Device (IED) (நாட்டு வெடிகுண்டுகள்), இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர்.
இம்மருத்துவமனைக்கு மூன்று கி.மீ தொலைவிலேயே தாஜ்மஹால் இருப்பதும், தீவிரவாதிகளின் தாக்குதல் வலயத்தினுள் ஆக்ராவும் அடங்கியிருப்பதும், இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாக இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது, சூட்கேஸ் பெட்டி ஒன்றில் குண்டு வெடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தாக்குதலை அடுத்து மேலும் பல முக்கிய நகர்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தகது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக